நாடு தழுவிய ஊரடங்கு வருமா? மத்திய அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம், 47,009 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அன்றைய தினம் ஒரேநாளில் இந்தியாவில் 213 பேர் பலியாகினர்.
மகராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலாகி இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு தழுவிய அளவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்துவதும் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
அத்துடன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2-வது அமர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது. கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதா குறித்தும், தயார் செய்யப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து இதில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.






