கமல் வாகனமும் தப்பவில்லை… தேர்தல் பறக்குப்படை அதிரடி சோதனை!
தஞ்சையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் வாகனத்தை பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். எனினும் இதில் எந்த பொருளும் சிக்கவில்லை.
வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். கையிருப்பாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் இருந்தால், அதனை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து கொள்வார்கள்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவர் பிரச்சாரத்துக்குச் சென்றார். அதை தொடர்ந்து, நேற்று மாலை தஞ்சை ரயிலடியில் பிரச்சாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சிக்கு புறப்பட்டார். அப்போது தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது கமல்ஹாசன் காரை தேர்தல் பறக்கும் படையினர் மறித்தனர்.
கமலின் பிரச்சார வாகனத்துக்குள் துணை ராணுவப்படையினர், போலீஸார் ஏறி சோதனையிட்டனர். சோதனை முடிந்து சில நிமிடங்களில் அவர்கள் கமலின் காரைவிட்டு இறங்கினார்கள். எனினும், வாகனங்களில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து காரில் திருச்சிக்கு கமல் புறப்பட்டு சென்றார்.
சில நாட்களுக்கு முன் கமல் கட்சியின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகரின் திருப்பூர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி 11.5 கோடி ரூபாயைக் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





