--- --:--:-- --

பல்லடம் அமமுக வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்- பல்லடம் வளர்ச்சிக்கு உதவுவதாக உறுதி!!

WhatsApp Image 2021-03-17 at 3.14.25 PM (1)

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமணி, ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் க. முத்துரத்தினம், மக்கள் நீதிமய்யம் சார்பில் அதன் விவசாயிகள் பிரிவு மாநிலச் செயலாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சாஅர்பில் கரிகாலன் (எ) சுப்பிரமணியன் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர்.

 

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தொகுதியில் செல்வாக்கு பெற்றுள்ள பிரபலமான ஜோதிமணி நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று, பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான வி. கணேஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

 

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு ஜோதிமணி அளித்த பேட்டியில், “பல்லடத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன். மக்களின் குறைகளை போக்குவேன். இதுவரை யாரும் பல்லடத்திற்கு எதையும் செய்யவில்லை. நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்படவில்லை. அதை செய்து தருவேன். பல்லடத்தில் சுகாதாரம் என்பதே ஜீரோதான்.

 

பல்லடத்தில் புறவழிச்சாலை என்பது செய்து தரப்படவில்லை. புறவழிச்சாலை அமைப்போம்; நகரில் மேம்பாலம் கட்டித்தருவோம். பல்லடம் மருத்துவமனையை தரம் உயர்த்த முயற்சிப்பேன். வாய்ப்பிருந்தால் பல்லடத்தில் மருத்துவக்கல்லூரி கொண்டுவரவும் நிச்சயம் பாடுபடுவேன்” என்றார்.

 

முன்னதாக, தேமுதிக மாவட்ட செயலாளர் முத்துவெங்கடேஷ்,  அமமுக – தேமுதிக தொண்டர்கள், கிளைக்கழகம், பூத் கமிட்டி நிர்வாகிகள் முதல் மாவட்ட, மாநில நிர்வாகிகள் என அனைவரும்  பல்லடம் பொன்காளியம்மன் கோவில் அருகில் இருந்து அணி திரளாக கூடினர். மேளதாளம் முழங்க, கட்சியினரின் வாழ்த்து கோஷங்களுக்கு மத்தியில் ஜோதிமணி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட்டார்.

 

பின்னர் வேட்புமனுவை ஜோதிமணி தாக்கல் செய்தார். வழி நெடுகிலும் பொதுமக்கள் பலர் உற்சாகத்துடன் திரண்டு ஜோதிமணியை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon