ஏனுங், இது கமல்ஹாசனுங்கோ! கோவைவாசிகளுக்கு ‘ஷாக்’ தந்த கமல்!! கட்சிக்குள் முணுமுணுப்பு!
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இன்று காலையிலேயே பொது இடத்தில் வாக்கிங் சென்றதுடன் மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று மக்களிடம் குறை கேட்டார். திடீரென வந்த நடிகர் கமலை பார்த்து கோவைவாசிகள் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடினர்.
வரும் 8ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், நேற்று மாலை கோவை ராஜவீதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அதே நேரம், கமல்ஹாசனுக்கு கோவை சொந்த ஊர் இல்லை என்பதால், மக்களிடையே பரிட்சயம் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று காலை எந்தவித ஆடம்பரமும் இன்றி ரேஸ் கோர்ஸ் பகுதி சாலையில் ‘சோலோவாக’ , கமல் வாக்கிங் சென்றார்.

பின்னர், ராமநாதபுரம் சாண்டோ சின்னப்பதேவர் திருமண மண்டபம் சென்ற அவர். அங்கு சிலம்பம் சுற்றி பயிற்சி மேற்கொண்டார். அங்கு சிறுவர்களிடம் கலந்துரையாடிய பின்னர், பொதுமக்களிடமும் பேசினார். கமல் வந்திருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் அங்கிருந்தவர்கள், ‘நடிகர்’ கமலை பார்க்க ஆவலுடன் திரண்டனர்.
அங்கிருந்து புறப்பட்ட கமல், தொடர்ந்து மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கமல்ஹாசனின் இந்த பிரச்சார முறைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எளிமை என்று சொல்லிக் கொண்டு வாக்கில் செல்லும் இடங்களில் எல்லாம் கேமரா ஆட்களை அழைத்துச் சென்று, தேர்தல் நேரத்தில் ‘ஸ்டண்ட்’ அடிப்பதாக சிலர் குற்றம்சாட்டினர்.
இந்த மாதம் முழுவதும் கட்சியின் தொகுதி பிரச்சாரங்கள் செல்வது தவிர்த்த மீத நேரங்கள் கமல் கோவையிலேயே செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் கோவையில் அவர் தங்கிவிட்டால், மக்கள் நீதிமய்யமும் தேர்தலில் பின்‘தங்கிவிடும்’ என்று அக்கட்சியினர் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




