அதிகரிக்கும் கொரோனா… தமிழக அரசு அவசர ஆலோசனை! தேர்தல் தள்ளிப் போகுமா?
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய, தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இதனால் தேர்தல் தள்ளிப் போகுமா என்று அரசியல் கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே இருந்தநிலையில், தற்போது 25 ஆயிரத்துக்கு மேல் தாண்டி விட்டது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 350 என்றளவில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நாட்களுக்கு பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில், அங்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்க தொடங்கி இருப்பதால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் அதிகரித்து வருவது, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து, காணொளியில் மூலம் அவசர ஆலோசனை நடைபெறுகிறது.
தேர்தல் காலம் என்பதால், கூட்டமாக மக்கள் கூடுவது, வாக்குச்சேகரிப்பது என்பது தீவிரமடைந்துள்ளது. இது கொரோனா பரவலுக்கு மேலும் வழிவகுக்கும் என்பதால், தேர்தல் பிரசாரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, கொரோனா பரவலை காரணம் காட்டி, தேர்தல் தள்ளிப் போகலாம் என்று சமூக வலைதளங்களில் பரவிய தகவல், அரசியல் கட்சியினர் இடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




