பிரசாரத்தில் கார் மீது தாக்குதல்! காயமின்றி தப்பினார் கமல்!!
காஞ்சிபுரத்தில் நேற்றிரவு பிரசாரம் செய்து கொண்டிருந்த மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் கார் தாக்கப்பட்டது. இதில், காயமின்றி அவர் தப்பினார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கி, வரும் 19ம் தேதி நிறைவடைகிறது. முக்கிய கட்சிகள் எல்லாம் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு அவர் புறப்பட்ட போது, காந்தி சாலை அருகே, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கமல்ஹாசனின் காரை தாக்கினார்.
இதில் கமல்ஹாசன் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது; இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக கமல்ஹாசனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனிடையே, கமல் கார் மீது தாக்குதல் நடத்திய நபரை பிடித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர், சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பலத்த காயமடைந்த அந்த நபர் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கமல்ஹாசன் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




