--- --:--:-- --

30 கேட்ட பாஜகவுக்கு 20! சாதித்துக்காட்டிய ஈ.பி.எஸ்… நள்ளிரவில் நடந்தது என்ன?

amith sha edappadi 01

அதிமுக – பாஜக இடையிலான தொகுதி உடன்பாடு, நள்ளிரவில் திடுதிடுப்பென முடிந்திருப்பது, பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதே நேரம் 40 தொகுதிகள் கேட்டு, 30 வரை இறங்கி வந்த பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி, தனது சாணக்கியத்தனைத்தை எடப்பாடி பழனிச்சாமி காட்டியிருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒருமாதமே உள்ள நிலையில், வரும் 12ம் தேதி வேட்புமனு தாக்கலும் தொடங்கவுள்ளது. ஆனால், அதிமுக – திமுக கூட்டணியில் இன்னமும் தொகுதிப் பங்கீடு பேச்சுகளே நிறைவடையவில்லை. எல்லாவற்றையும் வரும் 9ம் தேதிக்குள் முடித்து, 10ம் தேதியில் இருந்து பிரசாரத்தில் கவனம் செலுத்த திமுக – அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

 

அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது; அப்போது, பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை, அக்கட்சித்தலைவர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தனர். அதில் 40 தொகுதிகளுக்கு குறையாமல் இருந்ததை பார்த்து, முதல்வர் பழனிச்சாமி எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை; பேசிக் கொள்ளலாம் என்றார்.

 

பின்னர், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது அதிமுக தரப்பில் 20 தொகுதிகள் தரப்படும் என்றனர்; பாஜக 30 தொகுதிகள் என்று இறங்கி வந்தது. அதன் பின்னர் நடந்த பேச்சிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அதிமுக – பாஜக இடையே நள்ளிரவில் நிறைவேறிய தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம், அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்த ஒப்பந்தத்தில், அதிமுக தரப்பில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் இருவரும், பாஜக தரப்பில் அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

யாருமே எதிர்பார்த்திருக்காத நிலையில், நள்ளிரவில் இரு கட்சிகளும் உடன்பாடு செய்து கொண்டது ஏன்? அவசர கதியில் ஒப்பந்தம் போடப்பட்டதன் பின்னணி குறித்து, தலைநகரில் உள்ள பத்திரிகையாளர்கள் கூறியதாவது:

 

தேர்தலுக்கு ஒருமாதமே அவகாசம் உள்ள நிலையில் இன்னமும் தொகுதிப் பங்கீடு பற்றியே பேச்சு நடத்திக் கொண்டிருந்தால், தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு என பல வேலைகளும் பாதிக்கப்படும் என்று அதிமுக தரப்பு கருதியது. அதனால் தான், கூட்டணி இறுதி செய்யும் முன்பே, ஜெயலலிதா பாணியில் நல்லநாள் பார்த்து நேற்று வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது.

 

அத்துடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார். அதற்கு முன்பாக உடன்பாடு கையெழுத்திட்டாக வேண்டும் என்று டெல்லி தலைமை அறிவுறுத்தியதாம். அப்படிப் பார்த்தால் இன்று அஷ்டமி, நாளை நவமி என்பதால், வெள்ளிக்கிழமையான நேற்றைக்குள் உடன்பாடு செய்தாக வேண்டிய நிர்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டது.

 

ஆனால், பாஜக தலைவர் முருகன் தென் மாவட்டங்களிலும், தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி திருச்சியிலும் இருந்தனர். இதையடுத்து, இரு கட்சி தலைவர்களும், நேற்றிரவே தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்; பாஜகவினருக்கு ஏற்பட்ட நெருக்கடியை சரியாக பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, 20 தொகுதிகளுக்கு மேல் வழங்க இயலாது என்று கறார் காட்டினார்.

 

பேரம் பேசுவதற்குக்கூட நேரம் இல்லாத நெருக்கடியில், பாஜக தலைமை ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே விதித்து, இத்தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. அதாவது, ஒதுக்கப்படும் 20 தொகுதிகளில் 10 தங்களுக்கு விருப்பமானதாக இருக்க வேண்டும் என்பதுதான். இதை அதிமுக தலைமை ஏற்றுக் கொள்ள, பேக்ஸ் மூலமே கையெழுத்திட்டு, நள்ளிரவு 11:45 மணிக்கு உடன்பாடு குறித்த அறிக்கையும் வெளியானது.

 

இதன்மூலம், பாமகவைவிட பாஜக பெரியதல்ல என்று ராமதாஸுக்கு உணர்த்தி, அவர்களை குஷிப்படுத்தி உள்ளார் முதல்வர் பழனிச்சாமி. மேலும், பாஜகவின் கைப்பிள்ளையாக அதிமுக செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும், அவர் தவிடுபொடியாக்கி இருக்கிறார். தனது சாணக்கியத்தனத்தால் பாஜகவின் நிர்பந்தத்திற்கு பணியாமல் சதுர்யமாக முதல்வர் பழனிச்சாமி செயல்பட்டு காரியத்தை சாதித்துவிட்டதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதேபோல், 12 தொகுதிகளை கேட்டு வரும் ஜி.கே. வாசனின் தமாகவுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கும் 15 தொகுதிகளுக்கு மேல் இல்லை; இஷ்டமிருந்தால் வரட்டும் என்ற ரீதியில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாம். மொத்தத்தில் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் அதிமுகவின் கையே ஓங்கிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

Leave a Reply

Right Menu Icon