--- --:--:-- --

புதுவை அரசியலில் திருப்பம்! கமல் கட்சியுடன் என்.ஆர்.காங்கிரஸ் பேச்சு!!

Rangasamy Kamal

திடீர் திருப்பங்களுக்கு பேர்போன புதுச்சேரியில், பாஜக மீது அதிருப்தியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி ஆகியன கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளன.

 

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்குள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருகின்றன. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த பின், என்ஆர் காங்கிரஸ்-அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறைந்த நாட்களே ஆட்சி என்பதால், அக்கட்சிகள் உரிமை கோரவில்லை. எனவே, அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

 

இதற்கிடையே, வரும் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த, பாஜக தயங்கியதால், அந்த கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ள, ரங்கசாமி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலை சந்தித்துவிட்டு, பிறகு முதல்வர் வேட்பாளரை பற்றி பேசலாம் என்று பாஜக சமாதானம் கூறினாலும் ரங்கசாமி அதை ஏற்கவில்லை.

 

இதையடுத்து, ரங்கசாமியை தங்கள் பக்கம் இழுக்க, புதுச்சேரி திமுக திட்டமிட்டது. அதற்கு முன்பாக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் முந்திக் கொண்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் -மக்கள் நீதி மய்யம் இடையே, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் மக்கள் நீதி மய்யம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சு நடத்தி உள்ளனர். எனினும், இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதா என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

 

ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி – பாஜக கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசியிருப்பது, புதுச்சேரி அரசியலில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. இதனால், பாஜக மட்டுமின்றி, ரங்கசாமியை இழுக்க திட்டமிட்டிருந்த திமுகவும் அதிர்ச்சியடைந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon