--- --:--:-- --

சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு: தேற்றுகிறார் முதல்வர் ஈ.பி.எஸ்

Edappadi 02

வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்து, வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு தரப்படும் என்று, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட் அதிமுக சார்பில் பிப்ரவரி 24ம் தேதி முதல், மார்ச் 3ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி மொத்தம், 8,241 விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருந்தன. கடைசி நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

 

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியில் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. காலையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது.

 

அதை தொடர்ந்து, நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ். அடங்கிய தேர்வுக்குழுவினர் நேர்காணல் செய்தனர். பிற்பகலில் எஞ்சிய மாவட்டங்களுக்கான நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

ஒரே நாளில் 8200 பேரை தனித்தனியாக நேர்காணல் செய்வது சாத்தியமற்றது என்பதால், மாவட்ட வாரியாக குழுவாக அமரச் செய்து, நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலின் போது முதல்வர் பழனிசாமி பேசும்போது, வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். சீட் கிடைக்கவில்லையே என்று சோர்ந்துவிடக்கூடாது. தற்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon