விசிகவுக்கு 6 தொகுதிகள்! திமுகவுடன் கையெழுத்தானது ஒப்பந்தம்!
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை, இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அதிமுக – திமுக அணியில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதில் தேக்க நிலை நீடிக்கிறது. கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்காதததால் அதிருப்தியில் பேச்சுவார்த்தையை புறக்கணிப்பு என, தொகுதிப்பங்கீட்டில் இன்னமும் இழுபறி தொடர்கிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொருத்தவரை முதலில் 12 தொகுதிகள், பின்னர் 10 தொகுதிகளை கேட்டது. இதற்கு திமுக தலைமை சம்மதிக்காததால் இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே, இன்று காலை 10 மணிக்கு சென்னை அசோக்நகர் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து, திமுக தலைவர்களுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை விசிக தொடர்ந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் முடிவில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவது என்று முடிவானது. இதுதொடர்பான உடன்பாட்டில் இரு கட்சிகள் சார்பில் மு.க. ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி ஆறு தொகுதிகளிலும் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பொதுத் தொகுதிகள், 4 தனித் தொகுதிகள் ஆகும்.
கடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





