--- --:--:-- --

கமல் கட்சியில் இணைந்த வி.ஐ.பி.! சேர்ந்ததுமே துணைத்தலைவர் பதவியில் நியமனம்!!

Kamal Ponraj

அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்து வந்த பொன்ராஜ், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்தார். தம்மை கட்சி தொடங்கவிடாமல் பாஜக தடுத்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

 

மக்கள் ஜனாதிபதி என்று அன்புடன் அழைக்கப்பட்ட அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ். இவர், அப்துல் கலாம் பெயரில் கட்சி தொடங்க திட்டமிட்டு பின்னர் கைவிட்டார். எனினும் நடிகர் ரஜினியுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார்; ரஜினி கட்சி தொடங்கினால், அதில் இணைவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் கட்சி தொடங்காத நிலையில், அமைதியாக இருந்து வந்தார்.

 

இந்த நிலையில், சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், அவரது கட்சியில் பொன்ராஜ் இணைந்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:

 

வல்லரசு இந்தியா என்ற கலாமின் கனவை நனவாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. நான், அப்துல் கலாமின் பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல், அப்போது பாரதிய ஜனதா கட்சி தடுத்து விட்டது.

 

ரஜினிகாந்துடன் இணைந்து 3 ஆண்டுகளாக தமிழகத்திற்கான கொள்கைகளை உருவாக்கினேன். கமல்ஹாசன் விடுத்த அழைப்பை ஏற்று, இப்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளேன். சமூகநீதி, அரசியல் நீதி, நீடித்த பொருளாதார நீதி அனைத்தும் மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும். 5.7 லட்சம் கோடி கடனை வைத்துள்ள தமிழகத்தின் நிலையை மாற்றுவோம் என்று, பொன்ராஜ் கூறினார்.

 

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசும்போது, அரசியலுக்கு நல்லவர்கள் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். இப்போது நல்லவர்கள், நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையானவர்கள் அனைவரும் மக்கள் நீதி மய்யத்தைத் தேடி வருகிறார்கள். கலாமின் அறிவியல் ஆலோசகராக செயல்பட்ட பொன்ராஜ், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். இது மகிழ்ச்சிக்குரியது. அவர் இனி ம.நீ.ம. கட்சியின் துணைத் தலைவராக செயல்படுவார்.

 

மகளிர் வாழ்க்கைத்தரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் எங்களிடம் உள்ளன. இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். ஒரு இளைஞர் 5-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கினால், அவருக்கு சிறப்பு நிதி வழங்கப்படும். ஆரோக்கியமான தமிழகம் என்ற இயக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் தோற்றுவிப்போம். மேலும், ஊராட்சிகள் தோறும் விளையாட்டு மையங்கள் தோற்றுவிக்கப்படும் என்றார்.

 

அண்மையில், மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அதேபோல் சட்டப்பஞ்சயாத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon