குறைந்த தொகுதி ஒதுக்கீட்டால் கசப்பு! திமுக மீது மார்க்சிஸ்ட் கடுப்பு!!
திமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகளை ஒதுக்க ஸ்டாலின் முன்வராததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிகளை முடிவு செய்வதில், அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக தரப்பில் பாமகவுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், பாஜக, தேமுதிகவுடன் பேச்சு நடந்து வருகிறது. எனினும் முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் திமுக ஒதுக்கியுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. எனினும், இறுதி முடிவு எட்டப்படாததால் தொகுதிகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் திமுக தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவில் அமைக்கப்பட்ட குழுவினர் மார்க்சிஸ்ட் தலைவர்கள் பேச்சு நடத்தினர். இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் சார்பில் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற்னர்.
இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் 12 தொகுதிகளை கேட்டதாகவும் திமுக 6 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேட்கும் தொகுதிக்கும் ஒதுக்கும் தொகுதிக்கும் சரிபாதி வித்தியாசம் இருப்பதால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரு கட்சிகளுமே இறங்கிவராததால் சுமூக முடிவு எட்டப்பட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இழுபறி நிலை நீடிப்பதை உறுதி செய்வது போல், பேச்சு வார்த்தைக்கு பிறகு வெளியே வந்த மார்க்சிஸ்ட் தலைவர்கள், அங்கு காத்திருந்த செய்தியாளர்களை சந்திக்காமலேயே சென்றனர். தொகுதிப் பங்கீடு தொடர்பாக அடுத்து என்ன செய்வது என்று இடதுசாரி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




