கோவை : தொழிலதிபர் காரை மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.27 லட்சம் கொள்ளை.அதிகாலை நிகழ்ந்த கொடுமை !!!
கோவையில் இன்று காலை தொழிலதிபர் ஒருவரின் காரை மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.27 லட்சம் கொள்ளை அடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூர் பகுதியை சேர்ந்த
அவரான் என்பவரின் மகன் அப்துல் சலாம் ( வயது 50 ). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தனது தொழில் விஷயமாக அடிக்கடி கோவைக்கு வந்து செல்வது வழக்கம்.அப்படி வந்து செல்லும்போது வியாபாரத்திற்கு உரிய பணத்தை எடுத்து செல்வாராம்.இவரிடம் மலப்புரம் மாவட்டம் பூக் கோட்டூர் பகுதியை சேர்ந்த அசைன் என்பவரின் மகன் சம்சுதீன் ( வயது 42 )டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
அப்துல் சலாம் தனது காரில் டிரைவர் சம்சுதீனுடன் நேற்று கோவைக்கு வந்தார்.பின்னர், வியாபாரம் முடிந்த பின்னர் இன்று அதிகாலை கோவையில் இருந்து புறப்பட்டார்.அப்போது, ரூ.27 லட்சம் பணத்தையும் அப்துல் சலாம் வைத்துள்ளாராம். பாலக்காடு சாலை நவக்கரை நந்தி கோவில் அருகே இன்று அதிகாலை 4:30 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று அப்துல் சலாம் சென்ற காரை வழிமறித்துள்ளது.
அந்த காரில் இருந்து இறங்கி வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அப்துல் சலாமை கத்தியை காட்டி மிரட்டியதால் பயந்து போன அப்துல் சலாமையும்,அவரது டிரைவர் சம்சுதீனையும் காரில் இருந்து இறக்கி தள்ளி விட்டு அப்துல் சலாம் வந்த காரை அவர் கொண்டு வந்த ரூ.27 லட்சம் பணத்துடன் கொள்ளை அடித்து சென்றுள்ளது.
இதனையடுத்து அப்துல் சலாம் கந்தேகவுண்டன் சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று நடந்த விஷயங்களை தெரிவித்துள்ளார்.
உடனே,கே.ஜி.சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பின்னர், செக்போஸ்ட்டிற்கு தகவல் தெரிவித்து தப்பி சென்ற காரை தேட துவங்கினர்.தொடர்ந்து கோவை எஸ்.பி.அருளரசு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும்,அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் அப்துல் சலாம் பணம் கொண்டு செல்லும் விபரம் தெரிந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இன்று அதிகாலை தொழிலதிபர் காரை மர்ம நபர்கள் பணத்துடன் கொள்ளை அடித்த சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







