கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் சுவாமி புறப்பாடு உள்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறும்.வெளிப்புறப்பாடு ரத்து – கோவில் நிர்வாகம் !!!
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்று காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவில்.இக்கோவிலில். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி,பகல்பத்து,இராப்பத்து உற்சவங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். உற்சவங்களின் போது மூலவரான அரங்கநாதசுவாமி சொர்க்கவாசல் வழியாக வந்து பின்னர் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் கோவிலை வந்தடைவார்.
இந்த நிலையில் இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக முகக்கவசம் அணிந்து,போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து கோவில்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நாளை ( வரும் டிசம்பர் 25 ஆம் தேதி ) தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
எனினும்,கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி தினத்தன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக பேனர் வைத்துள்ளது. இதனால் பக்தர்கள் மன வேதனையடைந்துள்ளனர்.
பேனரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை காலை 05.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்படும் எனவும்,கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு விழா நாட்களில் சுவாமி புறப்பாடு உள்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறும் எனவும்,வெளிப்புறப்னபாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,விழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனவும்,வைகுண்ட ஏகாதசி நாளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இந்த ராப்பத்து,பகல்பத்து,வைகுண்ட ஏகாதசி உற்சவங்களின் போது காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் எல்லா சாதியினரும் பந்தல் அமைத்து சுவாமி வீதிவுலா வரும் போது சிறப்பு பூஜைகளும்,அபிஷேக ஆராதனைகளும் செய்வதும் தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கம்.நடப்பாண்டு பந்தல் அமைக்கவும் காரமடை பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







