சிலிண்டர்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்..!
வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சிலிண்டர்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வருமானம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 15 நாள் இடைவெளியில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பேரிடர் சூழலில் புதிய விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதே ஆட்சியாளர்களுக்கு உள்ள கடமையும் பொறுப்பும் ஆகும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து தனது அறிக்கையில் அதிருப்தி தெரிவித்திருக்கும் ஸ்டாலின் டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில் தாய்மார்களின் கோபத்திற்கு ஆட்சியாளர்கள் தப்பமுடியாது என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 15 நாட்களில் 100 ரூபாய் உயர்த்தி இருப்பது பகல் கொள்ளையை விட மோசமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒரு கொரொனா பெருந்தொற்றால் வேலையும் வருமானமும் இல்லாமல் அவதிப்படும் மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசு உலகில் எந்த நாட்டிலும் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே சிலிண்டர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.






