கோவை : காரமடையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்செயினை அறுத்துச்சென்ற கொள்ளையன்! போலீசார் விசாரணை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அருகே காரமடையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயினை அறுத்து சென்ற கொள்ளையனை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை அண்ணா வீதியை சேர்ந்தவர் குப்புசாமி.இவரது மனைவி ருக்குமணி (வயது 80). இவர் தனது மகனுடன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வீட்டில் கூடுதலாக 2 வீடுகள் வாடகைக்கு இருப்பதாக வீட்டு வாசல் முன்பு தகவல் பலகை வைத்துள்ளார். இதனை பார்த்த இளைஞர் ஒருவர் திங்களன்று காலை ருக்மணியிடம் நேரில் சென்று வீடு விசாரிப்பது போல் கேட்டு விட்டு சென்றுள்ளார்.
பின்னர்,அதே நபர் மீண்டும் மதியம் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் முன் நின்று வாடகைக்கு விடப்பட்டதாக கூறிய வீட்டை ருக்மணியுடன் சேர்ந்து சென்று பார்த்துள்ளார். அப்போது, ரூக்மணியிடம் அடையாளம் தெரியாத அந்த நபர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அந்த நேரத்தில் தண்ணீர் எடுக்க ருக்மணி திரும்பிய போது சற்றும் எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை அறுத்து கொண்டு அங்கிருந்து வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பின்னர்,ருக்மணி சத்தம் போடவே அப்பகுதியில் பொறிக்கடை நடத்தி வந்த சிவகுமார் என்பவர் கொள்ளையனை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.ஆனால், கொள்ளையன் அங்கிருந்து வேகமாக பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் சென்றுள்ளார். இதையடுத்து ருக்குமணி மற்றும் அவரது மகன் இருவரும் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து காரமடை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 சவரன் கொள்ளையன் ஒருவன் அறுத்துச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






