குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும்படி மக்களை கட்டாயப்படுத்த முடியாது..!
குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும்படி மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 2000 ஆண்டில் தேசிய மக்கள் தொகை கொள்கை உருவாக்கப்பட்டதாகவும், 2017 தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் 3.2 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாக குறைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் சுகாதாரம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதில் ஆலோசனைகளை மட்டுமே மத்திய அரசால் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 1994 மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தின்படி இத்தனை குழந்தைகள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய அரசின் பிரமாண பத்திரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.






