சித்ராவின் முகத்தில் இருந்த காயம்..!கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணை..!
மாலை நேரங்களில் பெரும்பாலான மக்களின் மனதில் முல்லையாக வலம் வந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. சித்ரா என்பதைவிட முல்லை என்று சொன்னால்தான் தெரியும்.
விஜய் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் பெரும்பாலான குடும்பங்களில் அறிமுகமானவர். சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த சித்ரா தனியார் கல்லூரியில் எம்எஸ்சி சைகாலஜி படித்தவர்.
முதன்முதலில் விஜெ சித்து என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்களில் நடிப்பதை கடந்து நடனம், பாடல் பாடுவது, மாடலிங் என தனித்திறமைகளை கொண்டிருந்தவர்.
28 வயதான சித்ராவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள பிலிம் சிட்டியில் படப்பிடிப்பில் பங்கேற்று இருந்ததால் தனது வீட்டில் தங்கியிருந்தார்.
பின்னர் பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த 4 நாட்களுக்கு முன் இருவரும் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் ஹோட்டல் அறையில் சித்ராவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் மீட்கப்பட்டு கூறாய்விற்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடிகை சித்ராவின் முகத்தில் காயங்களும் இருப்பதால் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையின் போது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹேம் நாத் சித்ராவை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சித்ராவின் கன்னத்தில் காயம் இருந்தது குறித்து கணவன் ஹேம்நாத்திடம் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.






