--- --:--:-- --

கரெக்டா வந்துட்டோம்ல…! ‘ஜனவரியில் கட்சி தொடக்கம்… மவுனம் கலைத்தார் ரஜினி!!” ‘மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! என “டுவீட்”!!

9

தமது அரசியல் நிலைப்பாடு குறித்த நீண்ட மவுனத்தை கலைத்த ரஜினி, வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும் திட்டவட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  ‘மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என அவரது மன்ற நிர்வாகிகள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

 

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக முடிசூடா மன்னனாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே அரசியலில் குதிப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி அவ்வப்போது திடீர் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியே வந்தார். இதனால் ரஜினி அரசியலில் எப்போது ஈடுபடுவார்? என்று அவரது ரசிகர்களும் இலவு காத்த கிளிபோல் மிக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

 

ஒரு வழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கடந்த 2017 டிசம்பர் முதல் தேதி ரஜினி அரசியலில் குதிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அன்று ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்றும் 2021 தமிழக சட்டசபை தேர்தல் தான் தமது இலக்கு என்றும், 234 தொகுதிகளிலும் போட்டி என்று அறிவித்தார்.

 

ஆனால் அரசியலில் குதிப்பது உறுதி என்று அறிவித்து 3 வருடங்கள் கடந்த நிலையிலும் கட்சி தொடங்குவது குறித்து முடிவெடுக்காமல் ரஜினி மவுனம் சாதித்தார். இதனால் ரஜினி, அரசியல் கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் இலவு காத்த கிளி போல் தவமாய் தவமிருந்து எதிர்பார்த்து காத்திருந்தனர்.

 

இந்த நிலையில் கடந்த அக்டோபர் இறுதியில் ரஜினி பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி பரபரப்பான, இந்த அறிக்கை குறித்து டுவிட்டரில் தமது கருத்தை வெளியிட்ட ரஜினி, அந்த அறிக்கை தாம் வெளியிட்டது அல்ல; ஆனால் அதில் உள்ள விஷயங்கள் உண்மை தான் என்று கூறி பரபரப்பை மேலும் கூட்டினார். அந்த அறிக்கையில் என் உடல் நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

 

ரஜினியின் இந்த அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி குறியாக மாறியிருந்த நிலையில் திடீர் திருப்பமாக, கடந்த திங்களன்று ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் கட்சி தொடங்குவது பற்றியும், சாதக, பாதகங்கள் தொடர்பாக மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி விரிவாக விவாதித்ததாக தெரிகிறது. கூட்ட முடிவில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரஜினி கூறுகையில், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடந்தது. அவங்களோட கருத்தை என் கிட்ட சொன்னாங்க, என்னுடைய பார்வையை நான் பகிர்ந்துக் கிட்டேன். நீங்க என்ன முடிவெடுத்தாலும் உங்கக் கூட இருப்போம்ன்னு சொன்னாங்க. நா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் என் முடிவை தெரிவிக்கிறேன் என்று
கூறியிருந்தார்.

 

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடனும், நேற்று தமிழருவி மணியனுடனும் ரஜினி தீவிர ஆலோசனை நடத்தினார். இதனால் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அதிரடி முடி,வை ரஜினி எந்த நேரத்திலும் அறிவிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

 

லேட்டஸ்டா வந்துட்டோம்ல

 

இந்நிலையில் தான், லேட்டானாலும் லேட்டஸ்டா வந்துட்டோம்ல என்பது போல ரஜினி ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டு தமிழக அரசியலில் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

அந்தப் பதிவில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன், வெற்றிப் பெற்று நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மத சார்பற்ற ஆன்மிக அரசியலை உருவாக்குவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!” எனப் பதிவிட்டுள்ளார்.வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பம். டிசம்பர் 31-ல் அறிவிப்பு. மாத்தணும்.. எல்லாத்தையும் மாத்தணும்… இப்போ இல்லைனா… எப்பவும் இல்லை.. என ரஜினி பதிவிட்டது அவரது மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை ஏக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பை தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon