ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு விலக்கம்..!
ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளது. கிரானைட் ஊழல் வழக்கை வெளிக்கொண்டு வந்த போது நீதிமன்ற உத்தரவுப்படி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இப்போது திடீரென நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என்ற வாசகங்களுடன் ஊழலை ஒழிப்பதில் முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அண்மையில் விருப்ப ஓய்வு பெறுவதாக செய்திகள் வெளியாகியது.
மதுரையில் பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் ஊழல் தாதுமணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்த நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் விருப்ப ஓய்வை ஏற்றுக் கொள்வது குறித்து அரசு தரப்பில் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் விஆர்எஸ் கடிதத்தை அரசிடம் வழங்கிய நிலையில் நவம்பர் 5-ஆம் தேதி அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல்களை வெளிக் கொண்டு வந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்ற உத்தரவின்படி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்த 33 ஆவது நாளில் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 23 ஆண்டுகால பணி காலத்தில் நேர்மையாக பணியாற்றியதற்காக 20-க்கும் மேற்பட்ட முறை பணியிடை மாற்றம் செய்யப்பட்ட அதிகாரி சகாயம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முக்கியத்துவம் இல்லாத தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாதை என்ற அமைப்பின் சார்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலில் இறங்கி போட்டியிடுவார் என செய்திகள் வெளியான நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






