சாலை விபத்தில் பலியான தாராபுரம் பெண் காவலர்..!
திருமணமான ஒரே மாதத்தில் சாலை விபத்தில் பலியான தாராபுரம் பெண் காவலர் சகுந்தலாவுக்கு பேனர் வைத்து போலீசார் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு காவலராக பணிக்கு சேர்ந்த சகுந்தலா கடந்த ஓராண்டாக தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த கதிர்வேலன் என்பவருக்கும் கடந்த மாதம் 18ஆம் தேதி திருமணம் நடந்தது. விடுப்பிலிருந்த காவலர் சகுந்தலா நேற்று பணியில் சேர்வதற்காக தனது கணவரோடு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கலில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ரெட்டியார்சத்திரம் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் கதிர்வேல் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட சகுந்தலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சகுந்தலாவுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சகுந்தலா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருமணமான ஒரே மாதத்தில் பெண் காவலர் உயிரிழந்தார் என்ற சம்பவம் காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சகுந்தலா பணியாற்றிவந்த தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் அவருக்கு பேனர் வைத்து போலீசார் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.







