நடப்பு கல்வியாண்டுக்கான 75 சதவீத கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீத கல்வி கட்டணத்தை செலுத்த அனுமதி..!
நடப்பு கல்வியாண்டுக்கான 75 சதவீத கல்வி கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை பிப்ரவரி மாதத்திற்குள் வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்தது.
தனியார் பள்ளி கல்வி கட்டணம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடப்பாண்டில் நிர்ணயித்த கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலிப்பதற்கு அனுமதியளித்துள்ளது. அதில் 40 விழுக்காடு கட்டணத்தை செப்டம்பருக்குள் வசூலிக்கவும் மீதித் தொகையை பள்ளி திறந்த பிறகு வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது வரை எந்தவித அறிவிப்பும் இல்லாத நிலையில் 35 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் பல பள்ளிகள் 40 சதவீத கட்டணம் கூட இதுவரை முழுமையாக வசூலிக்கவில்லை எனவும் 6 லட்சம் மாணவர்கள் மாற்றுச் சான்று இல்லாமல் அரசு பள்ளிகளுக்கு சென்று விட்டதாகவும் தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டுவரும் நிலையில் சில மாணவர்கள் முதல் தவணை கட்டணமாக 40 சதவீத கட்டணத்தை செலுத்த வில்லை என்றாலும் அவர்களை தொடர்ந்து வகுப்புகளில் சேர்த்து பாடங்கள் நடத்தப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி தனியார் பள்ளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 75 சதவீத கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.






