“சபாஷ்…சரியான போட்டி!!” பாஜகவில் அண்ணாமலை ஐ.பி.எஸ் எனில், காங்கிரசில் இணையப் போகும் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்!!
இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அண்ணாமலை, தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் கலக்கலாக வலம் வருகிறார். இதற்கு போட்டியாக காங்கிரசுக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி கிடைத்rள்ளார். மத்திய அரசின் குடியுரிமை மசோதா உள்ளிட்ட பல திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்தாண்டு பதவியை ராஜினாமா செய்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரசில் இணையப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பான காட்சிகள் தினமும் அரங்கேறி வருகின்றன. பிரதான திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே முனைப்பு காட்டத் தொடங்கி விட்டன. இப்போதே இரு கட்சிகளின் முன்னணி தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கைப் போர் நடத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் இந்த இரு பெரும் கட்சிகளின் தலைமையில் அமையும் கூட்டணியில் தான் பிற கட்சிகள் பலவும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் நிலைப்பாடு வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது.
அதிலும், தமிழகத்தில் காலூன்றி விடத் துடிக்கும் பாஜகவின் செயல்பாடுகள் தான் படு ஸ்பீடாக உள்ளன. இந்த முறை சட்டசபையில் கணிசமான எண்ணிக்கையில் பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்; பாஜக இடம்பெறும் கூட்டணி அரசுதான் அமையும் என்று அக்கட்சித் தலைவர்கள் ஓங்கி முழங்குகின்றனர்.
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்குமா?
அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து கூடுதல் சீட்களை பெற்று, கூட்டணி ஆட்சி என பாஜக முழக்கமிடுவதை அதிமுக தரப்பு ரசிக்கவில்லை என்பதும் சமீபத்திய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்குமா? என்ற சந்தேகமும் நீடிக்கிறது. குறிப்பாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்காத விவகாரம், பாஜக – அதிமுக இடையே பெரும் மோதலாக வெடிக்கும் போல் தெரிகிறது. இதனால் எந்நேரமும் கூட்டணி டமால் டுமீல் ஆகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைமை இப்படியிருக்க பாஜகவோ எதற்கும் தயார் என்பது போல, கட்சிக்கு பிரபலங்களை ஆள் பிடிக்கும் வேலைகளை கச்சிதமாகவே செய்து வருகிறது. திரை நட்சத்திரங்கள், மாற்றுக் கட்சியில் அதிருப்தியில் உள்ள முக்கியப் புள்ளிகள் மற்றும் முன்னாள், இந்நாள் உயர் அதிகாரிகள் என பலரையும் கட்சியில் இணையச் செய்து பொறுப்புகளையும் வாரி வழங்குகிறது.
இந்த வரிசையில் கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பதவியை ராஜினாமா செய்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். நடிகை குஷ்புவும் கூட காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அண்ணாமலைக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்ட நிலையில் தீவிரமாக கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
திமுக தரப்பு உதாசீனம்
பாஜகவின் செயல்பாடுகள் இப்படி தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசும் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியுள்ளது. இம்முறை கூட்டணியில் காங்கிரசை வேண்டாத விருந்தாளியாகவே திமுக பார்ப்பதாக கூறப்படுகிறது. சொற்ப எண்ணிக்கையில் தான் சீட் வழங்க முடியும்; இஷ்டமிருந்தால் கூட்டணியில் இருங்கள் என்பது போல காங்கிரசை, திமுக தரப்பு உதாசீனம் செய்ய தயாராகி விட்டதாக பேச்சு எழுகிறது.
இதனாலேயே காங்கிரசும் தனி ரூட் எடுத்து செயல்பட ஆரம்பித்து விட்டது. தமிழகம் முழுவதும் கலப்பை ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ள காங்கிரஸ், அதில் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை விவகாரத்திலும் இரு கட்சிகளிடையேயான முரண்பாடு இப்போது பகிரங்கமாக வெடித்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? என்பதும் சந்தேகமாகியுள்ளது.
இளம் ஐஏஎஸ்
எனவே காங்கிரசும், பாஜக போல் தமிழகத்தில் கட்சியின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள புது யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளது. எல்லாம் ராகுல் காந்தி போட்டுத் தரும் பிளான் தான் என்றும் பார்க்கப்படுகிறது. பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ் இணைந்து முக்கியத்துவம் பெற்று வருவதற்கு போட்டியாக, காங்கிரசும் இளம் ஐஏஎஸ் ஒருவரை கட்சிக்குள் கொண்டு வரும் பணியை கச்சிதமாக செய்து முடித்துள்ளது. அவர் வேறு யாருமல்ல. மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கடந்தாண்டு ஐஏஎஸ் பதவியை உதறித் தள்ளிய சசிகாந்த் செந்தில் தான். இவரும் அண்ணாமலையைப் போல கர்நாடக மாநிலத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்பு வகித்த இளம் தமிழக அதிகாரி ஆவார்.
சசிகாந்த் செந்தில். 2009-ம் ஆண்டு, பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான செந்திலுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமம் ஆகும். ஐஏஎஸ் தேர்வில், மாநில அளவில், முதலிடம் பெற்று தேர்ச்சி அடைந்த இவர், கர்நாடகாவில் உதவி ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலப்பொறுப்புகளில் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கடந்த 2019 செப்டம்பரில் தனது ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், பா.ஜ.க அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்துவந்தார். குறிப்பாக, மத்திய அரசு கொண்டுவந்த என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக சசிகாந்த் செந்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் செந்தில் ஒரு பரபரப்பான பதிவை பதிவிட்டுள்ளார். அதில், எனது இலக்கினை அடைய காங்கிரஸ் கட்சியோடு இணைந்து பயணிப்பது என்று முடிவெடுத்துள்ளேன். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்கும் நெருக்கமான ஒரு இயக்கமாக காங்கிரஸ் இயக்கத்தைப் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைமை இன்று இந்தியா கருத்தியல் போரை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேற்றுமையை வலியுறுத்தவில்லை. ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. வெறுப்பை நம்பவில்லை. அன்பையும் நேசத்தையும் நம்புகிறது.
இந்தியாவும், உலகும் 21-ம் நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவால்களை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. மக்களோடு இணைந்து அச்சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளுக்கு பயணித்து காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கும் அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லும் செய்தியினை மக்களிடையே எடுத்துச் செல்லவும், இந்தியாவின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும் என் உழைப்பை செலவிட முடிவு செய்துள்ளேன் என சசிகாந்த் செந்தில் பதிவிட்டுள்ளார்.
சசிகாந்த் செந்தில் காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி , தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை நடைபெறவுள்ளது. தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ், தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் முன்னிலையில் இணையும் சசிகாந்த், காங்கிரசின் குரலை ஓங்கி முழக்கமிட உள்ளார். அண்ணாமலையை பாஜக எப்படி வளைத்ததோ அதே பாணியில் கர்நாடகாவில் பணிபுரிந்து ராஜினாமா செய்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அதிகாரியை காங்கி3 சும் களத்தில் இறக்குவதால் தமிழக அரசியல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்பது உறுதி.






