அக்காவையும், குழந்தையையும் சொத்துக்காக கொலை செய்த தங்கை..!
விழுப்புரத்தில் பெண் ஒருவர் குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பதியப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சின்னசாமி மகளான சுமதி ஒரு வயது மகள் ஸ்ரீநிதியுடன் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 31ஆம் தேதி உடலில் வெட்டு காயங்களுடன் தீப்பற்றிய நிலையில் சுமதியும், அவரின் ஒரு வயதுக் குழந்தையும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பதறிப்போன அக்கம்பக்கத்தினர் தாய், சேய் இருவரையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட பிறகும் சுமதி மற்றும் அவரின் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்த விசாரணையில் சுமதியின் தந்தை சின்னசாமி அளித்த வாக்குமூலம் தான் காவல்துறை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகள் சுமதிக்கு சமீபத்தில் பேய் பிடித்து இருந்ததாகவும் அதனால் அவர் குழந்தையோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார் சின்னசாமி. ஆனால் இதை ஒப்புக் கொள்ளாத கணவர் மற்றும் உறவினர்கள் சுமதி கொல்லப்பட்டிருப்பதாக கூறி அவரின் சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமதிக்கும் அவரின் தங்கை சுஜாதாவுக்கும் இடையே பிரச்சினை இருந்ததாகவும் அது தான் இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் என புதிய தகவல்களை கூறி அதிர வைத்தார் சுமதியின் கணவர். அதில் எழுந்த சந்தேகத்தில் சுஜாதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்
திடுக்கிடும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
விவசாயி சின்னசாமி சமீபத்தில் 20 சென்ட் நிலம் வாங்கி இருக்கிறார். அந்த சொத்து யாருக்கு என பங்கிட்டுக் கொள்வதில் அக்கா சுமதிக்கும், தங்கை சுஜாதாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபம் தலைக்கேறிய சுஜாதா உடன்பிறந்த சகோதரி என்றும் பாராமல் சுமதியையும், அவரின் ஒரு வயது குழந்தையையும் அரிவாளால் கொடூரமாக வெட்டியதோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்றதாக கூறுகிறது காவல்துறை. விசாரணைக்கு பின் சுஜாதாவை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






