6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்..!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்த நிலையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக கோவை மேட்டுப்பாளையத்தில் ஏழு செண்டி மீட்டரும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் குன்னூரில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.






