திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது..!
திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் திரையரங்கு வளாகத்தில் தனிமனித இடைவெளி குறைந்த பட்சம் ஆறு அடியாக பராமரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறியீடுகளை அமைக்க வேண்டும்.
திரையரங்குகளில் லிப்ட், எஸ்கலேட்டரில் குறைந்த அளவிலேயே மக்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்க வளாகத்துக்குள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். முககவசம் அணியாதவர்களை திரையரங்கில் அனுமதிக்கக்கூடாது.
திரையரங்க நுழைவு வாயிலில் ஊழியர்களை நிற்க வைத்து படம் பார்க்க வரும் மக்களின் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவர்களை திரையரங்கில் அனுமதிக்கக்கூடாது. திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க அனுமதி திரைப்படத்தின் இடைவெளியின் போது மக்கள் வெளியே வருவதைத் தடுக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
திரையரங்குகளில் டிக்கெட் வாங்குபவர்களின் தொலைபேசி எண்களை திரையரங்க நிர்வாகம் குறித்து வைத்திருக்க வேண்டும். திரையரங்குகளில் காட்சிக்கு காட்சி நேரத்தை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் திரையரங்கு மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும். குளிர்சாதன வசதி இருந்தால் வெப்பநிலை 24 டிகிரி யில் இருந்து 30 டிகிரிக்குள் பராமரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குளிர்பானங்கள் மட்டுமே திரையரங்கில் விற்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.






