பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை..! மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி!!
தேவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது பிறந்த நாள் விழா மற்றும் 58-வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை வந்தார்.
பின்னர் இன்று காலை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மதுரையில் இருந்து காரில் பசும்பொன் புறப்பட்டனர். வழியில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தெப்பக்குளம் அருகே உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பசும்பொன் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னிலும், அங்கு செல்லும் வழி நெடுகிலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






