கொசு மருந்து கருவியில் பற்றிய தீ..! அலறிய ஊழியர்கள்..!
டெங்கு கொசு ஒழிப்பின் போது கொசு மருந்து கருவி திடீரென தீப்பற்றி எரிந்ததால் நகராட்சி ஊழியர்கள் இருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் டெங்கு கொசு தொல்லை அதிகம் இருப்பதாக பொதுமக்கள் ஆணையருக்கு புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆணையர் உத்தரவின் பேரில் நாகை நகராட்சி ஊழியர்கள் டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகை 16வது வார்டு சங்கர விநாயகர் மேல் சந்து பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் நகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கருவியில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகராட்சி ஊழியர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். இந்த விபத்தில் கொசு மருந்து கருவியை இயக்கி கொண்டிருந்த நகராட்சி ஊழியர்கள் தமிழ் மற்றும் மனோகரன் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
கொசு மருந்து கருவியின் புகை வரும் குழாயில் இருந்து தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது. ஊழியர் ஒருவர் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அதனருகில் சென்று கொசு மருந்து கருவியில் பற்றிய தீயை அணைத்துள்ளார்.
காயம் அடைந்த ஊழியர்கள் இருவருக்கும் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட கொசு மருந்து கருவியை முறையாக பராமரிக்காத காரணத்தால் தீ பிடித்ததாக காயம் அடைந்த ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






