கருணைமிக்க காவல் ஆய்வாளரின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி போஸ்டர்..!
காவல் ஆய்வாளரின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி திருப்பரங்குன்றம் பொதுமக்களும், வியாபாரிகளும் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிகிறார் மதனகலா.
இவர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஊரடங்கு காலத்தில் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உணவில்லாமல் தவித்த குரங்குகளுக்கு உணவு அளிக்கவும் வந்தார்.
அக்கறையுடன் செயல்பட்டு பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தார். இதனால் பொதுமக்களுக்கு ஆய்வாளர் மதனகலா மேல் தனிப்பிரியம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆய்வாளர் மதன கலா தேனி மாவட்டம் போடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைக் கேள்விப்பட்ட திருப்பரங்குன்றம் பொதுமக்கள் ஆய்வாளர் மதனகலாவின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டுமென திருப்பரங்குன்றம் காவல் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் போஸ்டர் அடித்து மாநகர காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.







