பீகார் சட்டப்பேரவைக்கு நாளை முதல் 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது..!
பீகார் சட்டப்பேரவைக்கு நாளை முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமாரின் பதவி காலம் நிறைவடையும் நிலையில் பீகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய லோக் ஜனசக்தி தனித்து போட்டியிடுகிறது. இதைப்போல ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள மகா கூட்டணி தேர்தல் களத்தில் உள்ளது.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் முதல் கட்டமாக 27 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரொனா காலத்தில் நடைபெறும் முதல்பொதுத் தேர்தல் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு கையுறை, சனிடைசர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் போட்டியிடும் ஆயிரத்து 66 பேர் வேட்பாளர்களை 2 கோடி பேர் தேர்வு செய்ய உள்ளனர்.
முக்கியமாக காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற ஸ்ரேயா சிங் பாஜக சார்பில் ஜாமிய தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய பிரகாஷ் நாராயணன் யாதவின் சகோதரரான விஜய் பிரகாஷ் யாதவ் போட்டியிடுகிறார்.
ஜெயபிரகாஷ் நாராயணன் யாதவின் மகளான திவ்யா பிரகாஷ் தாராப்பூர் தொகுதியில் களம் காண்கிறார். இரண்டாம் கட்டமாக நவம்பர் 3ஆம் தேதி 94 தொகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக நவம்பர் 7ஆம் தேதி 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்படுகிறது.






