--- --:--:-- --

எதிர்க்கட்சிகள் “அரசியல்” செய்யாமல் “அவியலா” செய்யும்? முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் “நச்” பதிலடி

0.4

திமுக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம், அரசியல் ஆதாயத்திற்காகவே மு.க.ஸ்டாலின் பழி போடுகிறார், குற்றம் சாட்டுகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக இடையே இப்போதே மல்லுக்கட்டு தொடங்கி விட்டது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவில் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் .மாற்றுக் கருத்தில்லை. இதனால் இந்தத் தேர்தலில் எடப்பாடி VS மு.க.ஸ்டாலின் இடையே தான் போட்டா போட்டியாக அமையப் போகிறது. இதனால் இப்போதே இருவரும் ஏட்டிக்குப் போட்டியாக வார்த்தைப் போரில் காரசாரமாக இறங்கத் தொடங்கி விட்டனர்.

 

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அதிமுக அரசின் செயல்பாடுகளை மு.க.ஸ்டாலின் கடுமையாகவே சாடி வருகிறார். அதுவும் கொரோனா பரவல் ஆரம்பித்த காலம் முதல் அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தினமும் அறிக்கைகள் விடத் தவறுவதில்லை. சில நாட்களில் 2 , 3 அறிக்கைகள் கூட விடுகிறார்.

 

இதில் மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் விவகாரத்தில், அதிமுக அரசை மிகக் கடுமையாகவே சாடி வருகிறார். ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், ஆளுநருக்கு எதிராக அதிமுகவுடன் இணைந்து போராட்டம் நடத்தத் திமுக தயார்? நீங்கள் தயாரா? என்று முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பும் விடுத்தார். மேலும் மசோதாவுக்கு ஒப்புதல் தர 3 , 4 வாரம் தேவைப்படும் என தம்மை சந்தித்த அமைச்சர்களிடம் கூறியதாக ஆளுநர் தெரிவித்ததை மறைத்தது ஏன்? என மு.க.ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டு முதல்வர் எடப்பாடியை சற்றே சூடேற்றி விட்டது என்றே கூறலாம்.

 

இதற்கு பதிலடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் வார்த்தைக்கு வார்த்தை மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறார் என்று எடப்பாடி குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். இதற்கு இன்று ஆளுநர் மாளிகை முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும் எதுகை மோனையாக பதிலடி கொடுத்துள்ளார்.

 

அத்துடன் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை. எடப்பாடி ஆட்சியில் தான் அனுமதி தரப்பட்டது என்ற மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon