அப்பாடா… 82 நாட்களுக்கு பின் தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கு கீழ் இறங்கிய தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 82 நாட்களாக 5 ஆயிரத்திற்கு மேலாகவே தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், இன்று கீழே இறங்கி 4879 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச்சில் தொடங்கி படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த ஜூலை மத்தியில் உச்சம் தொட ஆரம்பித்த பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்து, தினசரி பாதிப்பு 8 ஆயிரம், 9 ஆயிரம் என உச்சத்திற்கு சென்றது.
பின்னர் கடந்த ஒரு மாதமாக 5 ஆயிரத்திற்கு மேல், 6 ஆயிரத்திற்கு கீழ் என்ற அளவிலேயே இருந்தது. இன்றைய பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை அறிவிப்பில், 82 நாட்களுக்குப் பிறகு 5 ஆயிரத்திற்கு கீழாக இறங்கி இன்று 4879 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 61 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது.
இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 5165 பேர் ஆவர். இன்னும் 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் உயிரிழந்தவர்கள் 6 2 பேர் என்ற நிலையில் மொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்னும் பாதிப்பு குறைந்தபாடில்லை. இன்றும் 1212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 83 ஆயிரத்து 251 ஆகவும், மொத்த உயிரிழப்பு 3428 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் சற்று கட்டுக்குள் உள்ள நிலையில், சுற்றியுள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கொரோனா ஆட்டம் 2வது அலையாக பேயாட்டம் போட்டு வருவது கவலையளிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.







