--- --:--:-- --

தமிழகம் முழுவதும் சத்துணவு பணியாளர் தேர்வுப் பணிகள் திடீர் நிறுத்தி வைப்பு!!

tamilnadu

மிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் மும்முரமாக பெறப்பட்ட நிலையில், கொரோனா பரவலை காரணம் காட்டி தேர்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது.மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் நேர்காணல் மட்டுமே நடத்தப்பட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படுவது வழக்கம். பெரும்பாலும் ஆளும் கட்சி புள்ளிகளின் சிபாரிசிலேயே இந்தப் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதும் வாடிக்கையாகவே நடந்து வருகிறது.

 

தற்போது சத்துணவு திட்டத்தில் மாநிலம் முழுக்க காலியாக உள்ள அனைத்து இடங்களுக்கும் நியமனம் செய்வதற்காக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான பெண்கள் தங்கள் பகுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து வந்தனர்.மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1000 பணியிடங்களுக்கு 35 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர்.

 

தமிழக அரசு திடீரென அறிவிப்பு

இந்நிலையில், இந்த பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.

 

இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon