மேற்கு வங்கத்தில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் மீது தடியடி..!
மேற்கு வங்கத்தில் தடையை மீறி தலைமை செயலகத்துக்கு ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். பதிலுக்கு பாஜகவினரும் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி தலைமை செயலகம் நோக்கி பாஜகவினர் பேரணியாக சென்றனர்.
தொற்று பரவல் சட்டத்தை காரணம் காட்டி பேரணிக்கு காவல்துறையினர் தடை விதித்திருந்த போதும் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நான்கு இடங்களில் இருந்து இந்த ஊர்வலம் புறப்பட்ட நிலையில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கடந்து பாஜக தொண்டர்கள் முன்னேற முற்பட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில் மேற்கு வங்க மாநில பாஜக துணைத் தலைவர் ராஜீவ் பானர்ஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமாயி சிங் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் பாஜகவினரும் காவல்துறையினரை திருப்பி தாக்கியதால் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையில் தூய்மைப்படுத்தும் பணிக்காக தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.






