பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கொல்லப்பட்டது எப்படி?
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நஞ்சு கொடுத்து கொல்லப்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு சிபிஐயிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதேநேரம் மும்பையில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் சில குறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றும் எய்ம்ஸ் குழு தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் என மூன்று விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .
சுஷாந்த் சிங் ராஜ்புத் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டதாக புகார்கள் எழுந்ததால் அது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நடிகைகள் தீபிகா படுகோன், ரகுள் பிரீட் சிங், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோரிடம் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
உடற்கூறு ஆய்வு அடிப்படையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்து வரும் நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினரும் ரசிகர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.
இந்த சூழலில் சுஷாந்த் ராஜ்புத்சிங்கின் உடற்கூறு ஆய்வு பற்றிய மருத்துவக் குழு மேற்கொண்ட ஆய்வு முடிவடைந்துள்ளது. அதற்கான அறிக்கை சிபிஐ வசம் வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் விஷம் கொடுத்து கொல்லப்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் மும்பை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வில் சில விஷயங்களை மருத்துவர்கள் கவனிக்கவில்லை என்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்திருப்பது இந்த வழக்கில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. குடும்ப வழக்கறிஞரான விகாஸ் அவர் கொல்லப்பட்டதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட புகைப்படத்தையும் மருத்துவ குழுவிற்கு தான் அனுப்பி வைத்ததாகவும் அதை பார்த்த மருத்துவர்கள் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் 200 சதவீதம் வரை இருப்பதாக கூறி இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிபிஐ அதிகாரிகளும் இந்த வழக்கு தொடர்பாக கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் விட்டு விடாமல் அனைத்தையும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.






