தமிழகத்தில் இன்று 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு… உயிரிழந்தோர் 80 பேர்… சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் வருகிறது. தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கு மேலாகவே பதிவாகி வருகிறது.
இன்றைய நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று புதிதாக 5791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 80 பேர் கொரோனா உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9313 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5706 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.25 லட்சமாக உயர்ந்துள்ளது.
தற்போது 46341 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் சென்னையில் 1,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் 4511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.







