--- --:--:-- --

பர்ஸ் இல்லை… ஏடிஎம் கார்டு எங்கோ விழுந்துவிட்டது.. அரசியல் ரீதியில் கேள்வி கேட்டார்கள்…! கடத்தப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளரின் மழுப்பல் பதிலால் குழப்பம்!!

sftdr

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கத்தி முனையில் மர்ம கும்பல் கடத்திச் சென்று சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்ட சம்பவத்தில் குழப்பம் நிலவுகிறது. கடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் அமைச்சரின் உதவியாளர் கர்ணன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அன்சாரி வீதியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் எம்எல்ஏ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அமைச்சரின் உதவியாளரான கர்ணன் இன்று காலை 11 மணியளவில் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் கத்திமுனையில் காரில் கடத்தப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பானது.

 

போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திய நிலையில்,
கடத்திச் செல்லப்பட்ட அமைச்சரின் உதவியாளர் கர்ணனை கடத்திய சிறிது நேரத்திலேயே அந்த மர்மக் கும்பல் விடுவித்து விட்டு தப்பியது. தளி அருகே காரிலிருந்து கர்ணனை இறக்கிவிட்டு விட்டு அந்தக் கும்பல் தப்பியதாக தகவல் வெளியானது. இதனால் மீண்டும் உடுமலை அலுவலகத்துக்கு திரும்பி வந்த கர்ணனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

மழுப்பல் பதிலால் குழப்பம்

 

கடத்தப்பட்டது ஏன்? கடத்தியது யார்? அல்லது கடத்தல் நாடகமா? என்பது மர்மமாக உள்ள நிலையில் கர்ணனிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில்,  தன்னை கடத்திய நபர்கள் யார்? என்று அடையாளம் தெரியாது. மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை.

 

என்னிடம் அரசியல் தொடர்பாக சில கேள்வி கேட்டார்கள். அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என்னை கடத்தியுள்ளனர். அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் கிடைக்காததால் என்னிடம் இருந்த செயின், மோதிரத்தை பறித்துக் கொண்டு என்னை கீழே இறக்கிவிட்டு காரில் சென்று விட்டனர். என்னிடம் பர்ஸ் இல்லை. ஏடிஎம் கார்டும் எங்கோ விழுந்துவிட்டது என முன்னுக்குப் பின் முரணாக கர்ணன் கூறியது போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இதனால் இந்த கடத்தல் சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன? என்பதில் பெரும் மர்மம் நீடிப்பதாகவே கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon