மேட்டுப்பாளையம் : காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை வழுக்கி விழுந்து மரணம்.வனத்துறையினர் விசாரணை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காயமடைந்த ஆண் யானையின் (சுமார் 18-20 வயது) சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தி பிடிக்க தலைமை வன உயிரின காப்பாளர் சென்னை அவர்களால் உத்தரவு பெறப்பட்டது. இந்த பணிக்காக இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.கும்கி யானைகளை கொண்டு யானையை பிடித்து சிகிச்சையளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால்,யானை நெல்லிதுறை காப்புக்காட்டின் மலைப்பாங்கான நிலப்பகுதிக்குச் சென்றதால் சாதகமற்ற நிலப்பரப்பு காரணமாக ஏற்படும் அபாயங்கள் மற்றும் பாறை நிலப்பரப்பில் காலில் இருக்கும் காயம் காரணமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டால் யானை நிற்பது சிரமம் என்பதனால் மருத்துவ குழுவினரால் சமதள பகுதிக்கு யானை வந்தபின் மயக்க மருந்து ஊசி செலுத்தி சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நீலகிரி மலை கீழ் சரிவு உள்ளடக்கிய நெல்லிதுறை காப்புக் காட்டின் எல்லையிலிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவால் அந்த யானை இறந்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்லித்துறை காப்புக் காட்டில் நேற்று மற்றும் இன்று தொடர்ந்து லேசான மழை பெய்ததால் யானை சேறான பகுதியில் வழுக்கி விழுந்ததாகவும், வழுக்கி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும், மேலும் காலில் இருந்த காயம் காரணமாக எழுந்திருக்க முடியவில்லை என்று தள வீடியோக்கள் மற்றும் குழு எடுத்த புகைப்படங்களில் இருந்து யூகிக்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும்,எழுந்திருக்கும் முயற்சியில் யானை விழுந்த இடத்திலிருந்து சுமார் 15 அடி தூரம் நழுவி இறுதியில் இறந்துவிட்டதாக தெரிய வந்ததாகவும்,காலில் ஏற்பட்ட காயம் தவிர அடிவயிற்றிலும் தோள்பட்டையிலும் வேறு ஒரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் யானை ஏற்கனவே இரண்டு இடங்களில் தந்ததினால் குத்தப்பட்ட
காயங்களும் இருந்ததாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை பிரேத பரிசோதனை நடக்க உள்ளதாகவும்
வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்திருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






