2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் மாணவர் சேர்க்கை இடங்கள் 20 சதவீதம் அதிகரிப்பு..!
2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் மாணவர் சேர்க்கை இடங்களை 20 சதவீதம் அதிகரித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் நகராட்சிகளில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த மாணவ, மாணவிகள் அதிக கல்வி கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கல்வி பயில மிகவும் சிரமப்படுவதாக அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
எனவே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.







