வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காலையில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் பிற்பகலில் திடீரென மழை பொழிந்தது. இதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாலையில் மழை பொழிந்தது.
பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மானாவாரி பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது அணைக்கு நீர்வரத்து 500 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 80 அடியை கடந்துவிட்டது.
முழு கொள்ளளவான 90 அடியை விரைவில் எட்டிவிடும் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மேலூரில் இடி மின்னலுடன் பெய்த மழையால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.






