எதிர்பார்ப்பில் திமுக பொதுக்குழு கூட்டம்…!ஸ்டாலின் முடிவுக்கு உதயநிதி முட்டுக்கட்டை… பொதுச்செயலாளர் ஆவாரா துரைமுருகன்?
திமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், பொதுச்செயலாளராக துரைமுருகனை அறிவிக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில் உதயநிதி தரப்பில் அதற்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. இதனால் திமுக பொதுக்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திமுக பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் கடந்த மார்ச் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவர், கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்தார். அன்பழகன் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி திமுகவில் எழுந்தது.
பதவி ராஜினாமா
கட்சித் தலைவருக்கு அடுத்தபடியாக திமுகவின் மிகப்பெரிய பதவி பொதுச்செயலாளர் பதவியாகும். அன்பழகனின் மறைவுக்கு பிறகு அந்த பதவியை மு.க.ஸ்டாலின் கூடுதல் பொறுப்பாக நிர்வகித்து வருகிறார். புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய, கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி திமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கொரொனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், திமுக பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அப்போது நடைபெறவிருந்த பொதுக்குழு கூட்டத்தில், திமுக பொருளாளராக இருக்கும் மூத்த தலைவர் துரைமுருகனை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
அதற்கு வசதியாக, துரைமுருகன் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதே சூட்டோடு பொதுச்செயலாளர் பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்து காத்திருந்தார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், துரைமுருகனை பொதுச் செயலாளாராக்கும் ஸ்டாலின் முடிவை ஏற்கவில்லை.
“முட்டுக்கட்டை போட்ட உதயநிதி & கோ”
கருணாநிதி காலத்தில் திமுகவில் அவர் எடுக்கும் முடிவுதான் இறுதியாக இருந்தது. ஸ்டாலின் உள்பட யாருமே, அதன்பிறகு அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், ஸ்டாலின் தலைவராக உள்ள தற்போதைய திமுகவிலோ நிலைமே தலைகீழாக உள்ளது. மு,க. ஸ்டாலின் முடிவில் உதயநிதியும் அவரது ஆதரவாளர்களும் குறுக்கிடுகின்றனர்; தங்களுக்கு வேண்டியவர்களை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை நியமிக்க நிர்பந்தம் கொடுக்கின்றனர்.

இதனால், காலங்காலமாக திமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் மன்ம் வெதும்பிப் போயுள்ளனர். உதயநிதியின் குறுக்கீடு அதிருப்தி அடைந்தவர்கள் தான் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு தாவத் தொடங்கியுள்ளனர். துரைமுருகன் விவகாரத்திலும், அவரை பொதுச் செயலாளர் ஆக்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டது உதயநிதி & கோ; அவர்களின் கடும் எதிர்ப்பால் என்ன செய்வது என்று புரியாமல் தவித்த ஸ்டாலின், கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததை காரணம் காட்டி, பொதுக்குழு கூட்டத்தை தள்ளிப் போட்டார்; இதனால், துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி என்ற கனவும் தாமதமானது.
பொதுக்குழு கூட்டம்…
இச்சூழலில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் நடைமுறைக்கு வந்தன. இதனால், ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டுமென்று, துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூற, அதற்கு மு.க. ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனினும் நேரடியாக கூட்டத்தை கூட்ட முடியாது என்பதால், காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்த அவர், தற்போது அதற்கான தேதியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செப். 1ம் தேதி) அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெறும். திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர், பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுச்செயலாளர் ஆவாரா துரைமுருகன்?
திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் உதயநிதி ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்களும் என்ன செய்வார்களோ என்ற கவலை ஸ்டாலினை வாட்டுவதாக, அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
உதயநிதி மட்டுமின்றி ஸ்டாலின் குடும்பத்திற்குள் இதுதொடர்பாக முணுமுணுப்பு இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. பொதுச் செயலாளர் பதவி கருணாநிதியின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- எதிர்காலத்தில் கட்சி பிளவுபடாமல் இருக்க இது உதவும் என்பது அவர்களின் வாதமாம். இதை சாக்காக வைத்து, திமுக எம்.பி. கனிமொழிக்கு அந்த பதவியை வழங்கலாம் என்பது அவரது ஆதரவாளார்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேநேரம், குடும்ப அரசியல் என்று மற்றவர்கள் கேலி பேசக்கூடும்; அத்துடன் டெல்லி அரசியல் செய்யவே கனிமொழிக்கு விருப்பம். எனவே பொதுச்செயலாளர் பதவி மீது அவருக்கு நாட்டமில்லை என்ற பேச்சும் உலவுகிறது.
இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு ஆ. ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் முட்டி மோதிப்பார்க்க விரும்புகிறார்களாம். ஆனாலும் ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் சாய்ஸ், துரைமுருகன் என்பதால், நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு திமுகவில் கடும் சூறாவளி வீசினாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை என்று உடன்பிறப்புகள் சிலர் நம்மிடம் கூறுகின்றனர்.
உதயநிதியின் எதிர்ப்பை மீறி துரைமுருகன் பொதுச்செயலாளராகிவிட்டால் திமுக பொருளாளர் பதவியையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். போதாக்குறைக்கு பொன்முடி, ஐ. பெரியசாமியும், இவர்களுக்கு போட்டியாக காய்களை நகர்த்துவதாக பேச்சு அடிபடுகிறது.
மொத்தத்தில், வரும் 9ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டம், திமுகவினர் மத்தியில் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் செப்டம்பர் 3ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி குறித்தும், சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த 5 மாதங்களாக கொரொனா ஊரடங்கால் முடங்கிக் கிடந்த தமிழக அரசியல் களம், திமுகவின் அடுத்தடுத்த நகர்வுகளாலும், வரும் 14ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதாலும், மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது.







