--- --:--:-- --

வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானை கேரளப்பகுதிக்குள் சென்றது..!

0.3

கோவை மாங்கரை பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானை கேரளப்பகுதிக்குள் சென்றது.யானைக்கு சிகிச்சை அளிக்க கேரள வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் !!!

 

கோவை மாங்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் வாயில் காயத்துடன் மக்னா யானை ஒன்று சுற்றி வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த யானையினை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

 

யானை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதும், அங்குள்ள தோட்டப்பகுதிக்கு வந்து தண்ணீர் குடிப்பதுமாக இருந்தது. வாயில் காயம் இருப்பதால் அதனால் தண்ணீர் குடிக்க முடியாமல் இருந்ததும் தெரியவந்தது.

 

இந்நிலையில் நேற்று தமிழக கேரள எல்லை ஓரம் இருந்த மக்னா யானை தமிழக எல்லையைக் கடந்து கேரள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. தமிழக வனத் துறையினர் யானையை கண்காணித்து வந்த நிலையில் கேரள வனப்பகுதிக்குள் சென்றதால் இது குறித்து அங்குள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

சோலையூர் அருகே உள்ள நல்லசிங்கா வனப்பகுதியில் தென்பட்ட யானையைக் கண்டு பிடித்த கேரள வனத்துறையினர் தற்போது கண்காணித்து வருகின்றனர். வாயில் காயமடைந்துள்ள மக்னா யானைக்கு சிகிச்சை அளிக்க கேரள வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

 

யானையை பிடித்து சிக்கிச்சை அளிக்கும்போது தான் யானைக்கு வாயில் எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பதும்,அது எந்த அளவில் உள்ளது என்பதும் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

கடந்த சில மாதங்களில் பல்வேறு காரணங்களால் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 யானைகள் இறந்துள்ள நிலையில் கேரள வனத்துறையினர் வாயில் காயமடைந்துள்ள மக்னா யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon