தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மாலையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, வண்டலூர், மயிலாப்பூர், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் சில மணி நேரம் வரை மழை கொட்டியது.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டியது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு தினங்களாக மழை குறைந்த நிலையில் நேற்று கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த கனமழை பின்னர் குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.







