தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா பாதிப்பு.. உயிரிழந்தோர் 118 பேர்..! சென்னையில் 986 பேருக்கு தொற்று!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,834 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 118 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு ஒரே மாதிரியாக 6 ஆயிரத்திற்கு கீழும், உயிரிழப்பு 100 தாண்டியும் பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5834 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 4-வது நாளாக இன்றும் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்து 986 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,050 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட கூடுதலாக 6,005 என பதிவாகியுள்ளது. இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,50,680 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 118 பேர் பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,159 ஆக உயர்ந்து உள்ளது.
இது வரை, தமிழகம் முழுவதும் 32,40,339 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 65,490 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கூடுதல் பாதிப்பு
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 388, திருவள்ளூர் 362 , காஞ்சி 330, கோவை 324, ராணிப்பேட்டை 333, தேனி 297 என கூடுதல் பாதிப்பு பதிவாகியுள்ளது. மதுரையில் இரு வாரங்களுக்கு முன்னர் தினமும் திடீரென உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று பாதிப்பு நூறுக்கும் கீழாக குறைந்து 90 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







