திமுகவை விமர்சித்து பார்த்திபன் வெளியிட்ட டிவீட்..!
சினிமாவில் புதிய பாதை அமைத்த இயக்குனர் நடிகர் பார்த்திபன் முதல் முறையாக திமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்திருப்பது விவாதப் பொருள் ஆகியுள்ளது. பார்த்திபன் நக்கல், நையாண்டிக்கு பெயர் பெற்றவர். எந்த விஷயத்தையும் புதுமையாக யோசித்து பேசக்கூடியவர்.
அதில் நகைச்சுவையை தாண்டி ஒரு கருத்தும் இருக்கும். இப்படி இவர் பேசும் பெரும்பாலான கருத்துக்கள் கவனம் பெறும் நிலையில் முதன்முறையாக திமுகவை மையமாக வைத்து அரசியல் ரீதியாக பார்த்திபன் பதிவிட்டுள்ள டிவீட் பேசுபொருள் ஆகியுள்ளது.
உதய சூரியன் உதய் சூரியனாகிறதாம்.! சிறுக சிறுக கதிர்கள் பெருக என தனது டுவிட்டரில் பார்த்திபன் பதிவிட்டு உள்ளது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. திமுகவில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பின்னர் அவரது அதிகார மையத்தை சுட்டிக்காட்டி கூறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எம்எல்ஏ அன்பழகன் மறைவுக்குப் பிறகு அவரது மாவட்ட செயலாளர் பதவிக்கு இளைஞரணி நிர்வாகி நியமனம் போன்ற நடவடிக்கைகளை இதற்கு காரணம் என்ற கருத்து பரவலாக உள்ளது. பார்த்திபனின் கருத்து எங்களுக்கு நேர்மறையாக உள்ளது என இளைஞர் அணி நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
விவாதத்தை உருவாக்கிய பார்த்திபனை அணுகியபோது உதயசூரியன் உதய்சூரியன் ஆகிகிறதா என்பது உங்கள் யூகத்திற்கு என பதிலளித்து தப்பித்துக் கொண்டாலும் பார்த்திபன் புதிய பாதையை நோக்கி பயணிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.






