கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பமே உயிரிழப்பு..!
கேரள நிலச்சரிவில் சிக்கி ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒரு குடும்பமே உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி பகுதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். 85 வயதான பேச்சியம்மாள் மகன், மருமகள், மருமகன், பேரன், பேத்தி என இருபதுக்கும் மேற்பட்ட உறவினர்கள் கேரள மாநிலம் இடுக்கியில் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி அவரது குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. மீதம் உள்ளவரின் நிலை என்ன என்பது குறித்தும் அறியாமல் மூதாட்டியும் அவரது மகளும் பரிதவித்து வருகின்றனர்.







