--- --:--:-- --

இட ஒதுக்கீட்டின் மீது மத்திய பாரதிய ஜனதா அரசு தாக்குதல்..!க்ரீமிலேயர் வரம்பை ரத்து செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

9

இட ஒதுக்கீட்டின் மீது மத்திய பாரதிய ஜனதா அரசு நடத்தும் அநியாயமான தாக்குதலை தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

நெடுங்காலமாக இடையறாத போராடி பிரதமராக சமூகநீதிக் காவலர் விபி சிங் பொறுப்பேற்ற பிறகு பெறப்பட்ட மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

 

ஏற்கனவே 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை கூட நிரப்பாமல் வஞ்சித்து மருத்துவக்கல்வியில் அறவே நிராகரித்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தின் கீழான அடிப்படை உரிமையை விதவிதமாக பாழ் படுத்தி வரும் மத்திய பாரதிய ஜனதா அரசு இப்போது கிரீமிலேயர் வருமான வரம்புக்கு நிகர சம்பளத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள் இட ஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டிக்கொண்டு பாய்ச்சுவது போல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதுவரை 4 முறை மட்டுமே க்ரீமிலேயருக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டு இருப்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு அளிக்கப்பட்டிருக்கும் மாபெரும் அநீதி என்று அவர் கூறியுள்ளார்.
இப்போது நிகர சம்பளத்தை எடுத்துக்கொண்டு கிரீமிலேயர் வருமானத்தை கணக்கிடுவோம் என்று துடிப்பது சமூக நீதிக்கு எதிரானது, அரசியல் சட்டத்திற்கு புறம்பானது, நாட்டின் போர்முனைக்கு முதலில் தடந்தோள் தட்டி புறப்படும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு துரோகம் இழைப்பது என்று அவர் கண்டித்துள்ளார்.

 

மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தவும் க்ரீமி லேயர் வருமான வரம்பை ரத்து செய்திடவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் ஏக பிரதிநிதி என்று தன்னை முன்நிறுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon