--- --:--:-- --

கொரோனா பாதிப்புக்கு ஆளான தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 4 ஆனது… நிலோபர் கபிலுக்கு தொற்று உறுதி

Kafeel

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் அவருடைய குடும்பத்தில் மகன் மருமகள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளான அமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் சூறாவளியாக சுழன்றடிக்கிறது. கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள மருத்துவ, சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் என பலரையும் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளாக்கிய நிலையில், தமிழக அரசியல் புள்ளிகளையும் பீதியடையச் செய்துள்ளது.

 

அரசியல் பிரமுகர்களில் முதன் முதலில் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளான திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

 

தொடர்ந்து திமுக, அதிமுகவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக அமைச்சர்களில் சிலரும் ஒருவர் பின் ஒருவராக கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சையில் குணமடைந்தார். அடுத்ததாக மின்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோரூக்கும் தொற்று உறுதியாகி சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வசிக்கும் அமைச்சர் நிலோபர் கபில், அவருடைய மகன், மருமகள் உள்பட குடும்பத்தில் 13 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளான அமைச்சர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசா மணி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொன்னையா என இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon