--- --:--:-- --

ராஜஸ்தானில் ஆட்சிக்கு எதிராக “ஆட்டம்” காட்டிய பைலட்டை “கட்டம்” கட்டியது காங்கிரஸ்…மாநில தலைவர், து முதல்வர் பதவிகள் பறிப்பு

IMG-20200714-WA0464
ராஜஸ்தானில் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக கலகம் விளைவிக்க முயன்ற சச்சின் பைலட்டை ஒரேயடியாக கட்டம் கட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளது காங்கிரஸ் மேலிடம் . மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும், துணை முதல்வர் பொறுப்பில் இருந்தும் பைலட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க இளம் தலைவராக திகழ்ந்தவர் சச்சின் பைலட். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற சச்சின் பைலட், கடந்த 2018-ல் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

 

ஆனால் பைலட்டுக்கு முதல்வர் பதவி கிடைக்காமல், அப்பதவி மூத்த தலைவர் அசோக் கொலாட் வசம் சென்றது. சச்சின் பைலட் துணை முதல்வராக நியமிக்கப்பட்டாலும் ஆட்சியில் முக்கியத்துவம் கிடைக்காத அதிருப்தியிலேயே இருந்து வந்தார்.

 

இதனால், மத்தியப் பிரதேசத்தில் மற்றொரு காங்கிரஸ் இளம் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மூலம் காங்கிரஸ் ஆட்சியை சமீபத்தில் காலி செய்தது போல், ராஜஸ்தானிலும் பைலட் மூலம் காங்கிரஸ் அரசை ஆட்டம் காணச் செய்ய பாஜக திட்டமிட்டதாக தெரிகிறது.

 

இது ஓரளவுக்கு பலித்துவிட்டது போல் தெரிந்த நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருடன் டெல்லிக்கு பறந்த பைலட் பாஜகவில் இணையப் போவதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

 

இதனால் அசோக் கெலாட் தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் பைலட்டை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் இறங்கியது. ஆனால் பைலட் பிடிவாதமாகவே இருந்ததாக தெரிகிறது.

 

இந்நிலையில், 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில்,124 பேர் ஆதரவுடன் முதல்வர் பதவியில் இருந்த கெலாட், கடந்த 2 நாட்களாக தன் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார்.

 

இதில் 106 எம்எல்ஏக்கள் வரை கலந்து கொண்டதால் ஆட்சி கவிழாது என உறுதி செய்து கொண்ட காங்கிரஸ் மேலிடம் சச்சின் பைலட்டை கட்டம் கட்ட முடிவு செய்தது. இன்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்
சச்சின் பைலட்டை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும், துணை முதல்வர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. பைலட்டுடன் அவரது ஆதரவு அமைச்சர்கள் இருவரும் நீக்கப்பட்டனர்.

 

இதைத் தொடர்ந்து, மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், பைலட் ம்ற்றும் இரு அமைச்சர்கள் நீக்கம் குறித்து தெரிவித்து ஒப்புதல் பெற்றார்.

 

ராஜஸ்தானில் ஆட்சியில் நீடிக்க பெரும்பான்மைக்கு 101 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில்,106 பேரின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

 

” ஆட்சியை கவிழ்க்க கங்கணம் கட்டிய பைலட்டின் பாச்சா பலிக்காமல் போய், இப்போது அவரையே காலி செய்து விட்டது காங்கிரஸ் தலைமை என்பது குறிப்பிடத்தக்கது”

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon