தமிழகத்தில் ஜூலை 31-ந் தேதி வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கான தடையை ஜுலை 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருவதால், நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கில் அவ்வப்போது சில தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.கடந்த மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மண்டல வாரியாக பிரித்து அந்த மண்டலங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதன் பின் மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயங்கலாம் என மாற்றம் செய்யப்பட்டது.
தனியார் வாகனங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் இ – பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் கடந்த ஜுன் 30-ந் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்தபோது மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது பொதுப் போக்குவரத்து ஜூலை 15ந் தேதி வரை ரத்து எனவும், அதன் பின் போக்குவரத்தை திறந்து விடுவது குறித்து அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் போக்குவரத்துக்கு ஜூலை 31-ந் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கிடையே தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. கொரோனா நிலவரம் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு மேலும் தளர்வுகளை அறிவிப்பதா? அல்லது கொரோனா பரவல் அதிகரிக்கும் இந்தச் சூழலில் புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பதா? என்று முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.







